திண்டுக்கல் மாவட்டம் அருகே பசுபதி பாண்டியன் (Pasupathi Pandian) கொலை வழக்கில் தொடர்புள்ளதாகக் கூறப்படும் நிர்மலா என்கிற பெண்ணை வெட்டிக் கொன்றவர்கள் தலையைத் தனியாக எடுத்துச் சென்று பசுபதி பாண்டியன் வீட்டு முன் வைத்துச் சென்று பழி தீர்த்துள்ளனர்.
தூத்துக்குடி அலங்காரத்தட்டைச் சேர்ந்த பசுபதி பாண்டியன் திண்டுக்கல் மாவட்டம் நந்தவனப்பட்டியில் குடியிருந்து வந்தார். 2012-ஆம் ஆண்டு ஜனவரி 10ஆம் நாள் பசுபதி பாண்டியன் அவர் வீட்டில் வெட்டிக் கொல்லப்பட்டார். இந்தக் கொலை வழக்கில் தூத்துக்குடி சுபாஷ் பண்ணையார் உட்பட 18 பேர் மீது குற்றஞ்சாட்டப்பட்டுத் திண்டுக்கல் நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருகிறது. கொலையாளிகளுக்கு அடைக்கலம் கொடுத்ததாகவும் துப்புக் கொடுத்ததாகவும் நந்தவனப்பட்டியைச் சேர்ந்த நிர்மலா என்ற பெண் மீதும் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
இந்த நிலையில் திண்டுக்கல் செட்டிநாயக்கன்பட்டியில் தனியாக நடந்து சென்றுகொண்டிருந்த நிர்மலாவை அரிவாளால் வெட்டிக் கொன்ற கொலையாளிகள் அவரது தலையைத் தனியாக எடுத்துச் சென்று நந்தவனப் பட்டியில் பசுபதி பாண்டியன் வீட்டின் முன் அவரது உருவப்படம் முன் போட்டு விட்டுச் சென்று விட்டனர். தகவல் அறிந்து விரைந்து வந்த தாடிக்கொம்பு காவல்துறையினர் நிர்மலாவின் உடலையும் தலையையும் கைப்பற்றிக் உடற் கூறாய்வுக்காகத் திண்டுக்கல் மாவட்ட அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
கொலை நடந்த இடத்திற்கு திண்டுக்கல் சரக டிஐஜி விஜயகுமாரி, மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் சீனிவாசன் ஆகியோர் நேரில் வந்து ஆய்வு மேற்கொண்டனர். பசுபதி பாண்டியன் கொலைக்குப் பழிக்குப்பழியாக இந்தக் கொலை நடந்துள்ளதாக கூறப்படும் இந்நிலையில் கொலையாளிகளைப் பிடிக்கத் தனிப்படை அமைத்துத் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.