இந்திய அணிக்கு அடுத்த இரு உலகக் கோப்பைப் போட்டிகளுக்கு (World Cup cricket) ரோஹித் சர்மாதான் கேப்டனாக இருக்க வேண்டும். கே.எல்.ராகுல், ரிஷப் பந்த்தை துணை கேப்டன்களாக நியமிக்கலாம் என இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் அறிவித்துள்ளார்.
ஐக்கிய அரபு அமீரகத்தில் அடுத்த மாதம் தொடங்கும் டி20 உலகக் கோப்பை போட்டிக்குப் பின் இந்திய அணியின் கேப்டன் பதவியிலிருந்து விலகுவதாக விராட் கோலி அறிவித்துள்ளார். ஆனால், அதன்பின், அடுத்த கேப்டன் யார் என்பது குறித்து இதுவரை பிசிசிஐ தரப்பில் தெரிவிக்கப்படவில்லை. டி20 அணிக்கு துணை கேப்டனாக இருக்கும் ரோஹித் சர்மாவே கேப்டனாக நியமிக்கப்படலாம் என்ற பேச்சு இருக்கிறது. ஏனென்றால், ரோஹித் தலைமையில் இந்திய அணி 2018 ஆசியக் கோப்பை, நிடாஹாஸ் கோப்பை ஆகியவற்றை வென்றுள்ளது. ஐபிஎல் தொடரிலும் 5 கோப்பைகளை மும்பை இந்தியன்ஸ் அணிக்காக வென்று கொடுத்து வெற்றி கேப்டனாக ரோஹித் வலம் வருகிறார்.
இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர், ரோஹித் சர்மாவை இந்த டி20 உலகக் கோப்பை போட்டிக்கும், ஆஸ்திரேலியாவில் அடுத்த ஆண்டு நடக்கும் டி20 உலகக் கோப்பைக்கும் கேப்டனாக நியமிக்க வேண்டும் என ஆலோசனை தெரிவித்துள்ளார். ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனலில் நடந்த நிகழ்ச்சியில் சுனில் கவாஸ்கர் பேசுகையில், அடுத்த 2 உலகக் கோப்பைப் போட்டிகளுக்கு ரோஹித் சர்மாதான் கேப்டனாக இருக்க வேண்டும் என நான் நினைக்கிறேன். ஏனென்றால், அடுத்த மாதத்தில் ஒரு டி20 உலகக் கோப்பை, அடுத்த ஆண்டு இதே காலகட்டத்தில் ஒரு டி20 உலகக் கோப்பை என இரு பெரிய தொடர்கள் நடக்கின்றன. இரண்டுக்கும் கேப்டன்களை மாற்றாமல் ஒரே கேப்டனாக ரோஹித் சர்மாவை நியமிக்கலாம்.
இந்த டி20 உலகக் கோப்பைக்கும், ஆஸ்திரேலியாவில் நடக்கும் டி20 உலகக் கோப்பை போட்டிக்கும் ரோஹித் சர்மாதான் கேப்டனாகச் செயல்பட வேண்டும் என்பது என்னுடைய கருத்து. துணை கேப்டனாக கே.எல்.ராகுலை நியமிக்கலாம். ரிஷப் பந்த்தை துணை கேப்டனாக நியமிக்கவும் நான் பரிந்துரை செய்வேன். ரிஷப் பந்த் ஐபிஎல் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு மிகவும் ஸ்மார்ட்டாக கேப்டன்ஷிப்பைச் செய்கிறார். சரியான நேரத்தில், ரபாடா, நார்ஜேவைப் பயன்படுத்துகிறார். தெருவில் விளையாடும் அணிகளின் கேப்டன் போன்று ரிஷப் பந்த் தெரிந்தாலும், சூழல்களை உணர்ந்து, அதற்கு ஏற்ப நடந்துகொள்ள, தெருவில் விளையாடும் ஸ்மார்ட் கேப்டன்தான் எப்போதும் தேவை. துணை கேப்டன்களாக கே.எல்.ராகுல், ரிஷப் பந்த் இருவரையும் நியமிக்கலாம் எனப் பரிந்துரை செய்வேன் எனத் தெரிவித்தார்.