கேரள நிலச்சரிவில் (Kerala landslide) தாய் மகன் கட்டியணைத்த நிலையில் சடலமாக மீட்பு – கண்கலங்க வைக்கும் காட்சிகள், கேரளாவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 11பேர் காணாமல் போன நிலையில் அதில் 5 பேர் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளனர்.
கேரளாவில் ஏற்பட்ட நிலச்சரிவில் காணாமல் போனவர்களை தேடும் பணிகள் நடந்து வருகிறது,. கேரளாவில் கொட்டித்தீர்க்கும் கனமழை காரணமாக மாநிலத்தின் பல மாவட்டங்கள் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. கனமழை, நிலச்சரிவு, வெள்ளம் காரணமாக பொதுமக்கள் சொல்லில் அடங்கா துயருக்கு ஆளாகியுள்ளனர். நிலச்சரிவின் காரணமாக வீடுகள் தரைமட்டமாகியுள்ளன. வெள்ள நீரில் ஆற்றங்கரையோரம் உள்ள வீடுகள் அடித்துச்செல்லப்படும் காட்சிகள் சமூகவலைத்தளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மீட்புப்பணிகளை மாநில அரசு துரிதப்படுத்தியுள்ளது.
இடுக்கி மாவட்டம் கொக்காயர் கிராமத்தில் நிலச்சரிவில் சிக்கியவர்களை தேடும் பணியில் பேரிடர் மேலாண்மை குழுவினர் ஈடுபட்டனர். அப்போது 10 வயதுக்குட்பட்ட 3 குழந்தைகள் கட்டியணைத்தவாறு சடலங்களாக மீட்கப்பட்டனர். இந்தக் காட்சிகள் காண்போரை கண்கலங்கச் செய்தது. குழந்தைகள், அம்னா(வயது 7), அஃப்சான் (வயது 8), மற்றும் அஹியன் ( 4) எனத் தெரியவந்தது. மழைக்கு நடுவே மீண்டும் தேடுதல் பணிகள் நடந்தது. சிறிது தூரத்தில் தாய் மற்றும் இரண்டு குழந்தைகள் என மூவரின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டது. தாய் மற்றும் அவரது 10 வயது மகன் இருவரும் கட்டியணைத்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டனர். குழந்தை இறந்த நிலையில் தொட்டிலில் இருந்து மீட்கப்பட்டது.
இறந்தது ஃபவூசியா ( வயது 28) அவரது மகன் அமீன் (வயது 10) எனத் தெரியவந்துள்ளது. மனைவி மற்றும் குழந்தைகளை இழந்த ஃபவூசியாவின் கணவர் சியாத் நிலச்சரிவு ஏற்பட்ட இடத்தில் சோகமாக அமர்ந்திருந்தார். நிலச்சரிவில் இறந்த அம்னா மற்றும் அமீன் இருவரும் சியாத்தின் குழந்தைகள், அஃப்சன் மற்றும் அஹியன் இருவரும் ஃபவூசியாவின் சகோதரரின் குழந்தைகள். சியாத் – ஃபவூசியா தம்பதியினர் கஞ்சிரப்பள்ளி பகுதியில் வசித்து வந்துள்ளனர். உறவினரின் திருமணத்துக்காக ஃபவூசியா இடுக்கியில் உள்ள தன் தாய் வீட்டுக்கு வந்துள்ளார். அப்போதுதான் இந்த துயர சம்பவம் நடந்துள்ளது. வீட்டின் காம்பவுண்டில் வெள்ளநீர் சூழ்ந்து இருப்பதை ஃபவூசியா உறவினர்களுக்கு வாட்ஸ்அப்பில் அனுப்பியுள்ளார்.