பேங்க்லாக்கர் (bank lockers) செயல்பாடு தொடர்பாக புதிய நெறிமுறைகளை ரிசர்வ் பேங்க் அண்மையில் வெளியிட்டுள்ளது. லாக்கரில் வைக்கப்படும் பொருட்களின் பாதுகாப்பை உறுதி செய்வது வங்கியின் பொறுப்பு என்று ரிசர்வ் பேங்க் தெரிவித்துள்ளது. இதன்படி, பேங்க் தரப்பில் ஏற்படும் தவறால் லாக்கரில் உள்ள பொருட்களில் இழப்பு ஏற்பட்டால், அதற்கான நஷ்ட ஈடு அளிக்கப்பட வேண்டும் என்றும் ரிசர்வ் பேங்க் குறிப்பிட்டுள்ளது. இழப்பிற்கான நஷ்ட ஈடு தொகை, லாக்கர் வாடகை கட்டணத்தின் 100 மடங்காக இருக்கும். இந்த புதிய நெறிமுறைகள் தொடர்பான அம்சங்களை பார்க்கலாம்.
இயற்கை இடர்கள்:
வெள்ளம், பூகம்பம், இடி, மின்னல் பாதிப்பு போன்ற இயற்கை இடர்களால் இழப்பு ஏற்பட்டால், அதற்கு பேங்க் பொறுப்பேற்காது. மேலும், வாடிக்கையாளர் தரப்பு தவறால் இழப்பு ஏற்படும் போது, பேங்க் பொறுப்பாகாது. எனினும், வங்கிகள் தங்கள் வளாகத்தை பாதுகாப்பாக வைத்திருக்க போதிய நடவடிக்கைகளை மேற்கொள்ளும்.
டெபாசிட் தொகை:
லாக்கர் வசதிக்கு பேங்குகள் வைப்பு நிதி துவக்க வலியுறுத்துவது உண்டு. இதற்கு புதிய நெறிமுறைகளும் அனுமதி அளிக்கின்றன. இது, மூன்று ஆண்டு கால வாடகை மற்றும் இதர தொகைக்கு நிகராக இருக்கலாம். எனினும், ஏற்கனவே உள்ள வாடிக்கையாளர்களிடம் இதை வலியுறுத்தக் கூடாது.
புதிய ஒப்பந்தம்:
பேங்க் லாக்கர் செயல்பாட்டிற்கான புதிய நெறிமுறைகள், அடுத்த ஆண்டு ஜனவரி முதல் அமலுக்கு வருகின்றன. எனினும், புதிய இழப்பீடு நெறிமுறைகள் பொருந்த, வாடிக்கையாளர் வங்கியுடன் புதிய ஒப்பந்தத்தில் கையெழுத்திட வேண்டும். வங்கிகள் தற்போதைய ஒப்பந்தத்தை, 2023 ஜனவரியில் புதுப்பிக்கும்.
லாக்கர் தகவல்:
புதிய லாக்கர் வசதிக்கு விண்ணப்பிக்கும் போது, பேங்குகள் வெளிப்படையான முறையில் தகவல் அளிப்பதில்லை என கருதப்படுகிறது. புதிய நெறிமுறைகளின் கீழ், பேங்குகள் தன் கிளைகளில் உள்ள லாக்கர் வசதிகளுக்கான காத்திருப்பு பட்டியலை வாடிக்கையாளர்களுக்கு அளிக்க வேண்டும்.
பேங்க் பொறுப்பு:
பேங்க் லாக்கரில் வைக்கப்படும் பொருட்களின் பாதுகாப்பிற்கு வங்கிகள் பொறுப்பேற்க வேண்டும். இதன்படி, தீ விபத்து, திருட்டு, கொள்ளை போன்ற சம்பவங்கள், தன் தரப்பு தவறால் நிகழாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். இத்தகைய சம்பவங்களால் இழப்பு ஏற்படும் போது, பேங்க் அதை ஈடு செய்ய வேண்டும்.