குழந்தையை மிருகத்தனமாகத் தாக்கிய (Cruel attack)தாய், கைது செய்யப்பட்டு தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். தகாத உறவின் விளைவாகவே இந்த கொடுஞ் செயல் நடத்தப்பட்டது விசாரணையில் அம்பலமாகியுள்ளது.
பெண் ஒருவர், தன் குழந்தையைக் கொடூரமாகத் தாக்கும் வீடியோ சில தினங்களாகச் சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதோடு, காண்போரின் மனதையும் பதைபதைக்கச் செய்தது. பெற்ற குழந்தையை தாக்கிய அந்தப் பெண் நேற்று (29.08.2021) இரவு தனிப்படை காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட நிலையில், இன்று விசாரணை முடிவில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
விழுப்புரம் மாவட்டம், செஞ்சியை அடுத்த மணலப்பாடி மதுரா மோட்டூர் கிராமத்தைச் சேர்ந்தவர் வடிவழகன்(37). இவருக்கும், ஆந்திர மாநிலம், சித்தூர் வட்டம், ராம்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த ராணி ( பெயர் மாற்றப்பட்டுள்ளது ) (22) என்ற பெண்ணுக்கும் கடந்த 2016-ம் ஆண்டு திருமணம் நடந்தது. சென்னையில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் வடிவழகன் வேலை செய்து வந்ததால், சென்னையில் வசித்து வந்துள்ளனர். இந்த தம்பதிக்கு 4 மற்றும் 2 வயதில் இரு ஆண் குழந்தைகள் உள்ளனர். முதன் முறையாக கொரோனா பரவிய காலத்தில் செஞ்சி அருகே உள்ள தனது கிராமத்திற்கே வந்து வசிக்க தொடங்கியுள்ளனர்.
திருமணம் ஆன சிறிது நாட்களிலிருந்தே கணவன், மனைவி இருவரிடையே தொடர்ந்து கருத்து வேறுபாடு இருந்து வந்துள்ளது. கடந்த பிப்ரவரி மாதம் 23-ம் தேதி தனது கணவன் வீட்டில் இல்லாத நேரத்தில், தனது 2 வயது மகனை கொடூரமாகத் தாக்கி அதை வீடியோவாகப் பதிவுசெய்து வைத்துள்ளார் ராணி. புதுவை ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அக்குழந்தை தந்தை வடிவழகன் கவனிப்பில் உள்ளான். அப்போது, தம்பதிகளுக்குள் நடந்த சண்டையின் முடிவில், ராணியை அவரது தாய் வீட்டிற்கு அழைத்துச் சென்று விட்டுவிட்டு வந்துள்ளார் வடிவழகன். இருவரும் விவாகரத்து செய்து கொள்ளும் முயற்சியும் நடந்துள்ளது.
சில தினங்களுக்கு முன்பு, விவாகரத்து பெறுவதற்கான பத்திரத்தில் கையெழுத்து வாங்குவதற்காக ஆந்திரா, ராம்பள்ளியில் உள்ள ராணியின் வீட்டிற்குச் சென்றுள்ளார் வடிவழகன். அப்போது தனக்குச் சொந்தமான பொருட்களை கேட்டு வாங்கும்போது, செல்போனையும் வாங்கி வந்துள்ளார் அவர். வீட்டிற்கு வந்த பின்பு செல்போனை பார்த்தபோது, அந்த விடியோவைப் பார்த்து அதிர்ந்து போயுள்ளார். இதுதொடர்பாக, காவல் நிலையத்தில் புகாரும் அளித்துள்ளார். குழந்தையைத் தாக்கிய தாயின் மீது 323, 325, 355, 308, ஜே.ஜே சட்டம் உட்பட மொத்தம் 6 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்த காவல்துறை விசாரணையை முடுக்கிவிட்டது. சமூக வலைதளங்களில் வீடியோ வேகமாக பரவி மேலும் பதற்றத்தை ஏற்படுத்தியது.
இதனால், விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநாதா அறிவுறுத்தலின் பேரில் தனிபடைப்படை அமைக்கப்பட்டு ராணியைத் தேடும் பணியைத் தீவிரப்படுத்தப்பட்டது. ஆந்திர மாநிலம், சித்தூர் வட்டம், ராம்பள்ளியில் உள்ள கோழிப்பண்ணையில் இருந்த ரபாணியை அங்குள்ள காவல்துறையினரின் உதவியோடு கைது செய்த விழுப்புரம் போலீஸார், நேற்று (29.08.2021) இரவு சத்தியமங்கலம் காவல்நிலையத்திற்கு அழைத்து வந்தனர். டி.எஸ்.பி இளங்கோவன் தலைமையில் விசாரணை நடைபெற்றபோது, திடுக்கிடும் பல தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதுதொடர்பாக டி.எஸ்.பி இளங்கோவனிடம் பேசினோம். “ராணிக்கும், அவரது கணவன் வடிவழகனுக்கும் ஏறத்தாழ 15 வயது வித்தியாசம். திருமணம் செய்து இவர்கள் சென்னையில் வசித்துவந்தபோது இந்தப் பெண்ணிற்கும், பிரேம்குமார் என்ற நபருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து வீடியோகால் மூலம் பேசத் தொடங்கியுள்ளனர். பிரேம்குமார் ராணியை, அவரது கணவருடன் சண்டைபோட்டுவிட்டு அம்மா வீட்டுக்கு வந்துவிடுமாறு கூறியுள்ளார். அப்படி வந்தபின் பிரேம்குமார் ராணியின் அம்மாவிடம் பேசிய ராணியைத் திருமணம் செய்துகொள்வதாகக் கூறியுள்ளார். மேலும் வீடியோ காலில் பேசும்போது ராணியினுடைய பெரிய பையன் ரணியைப் போலவே அழகாக இருப்பதால் அவனை தனக்கு பிடித்துள்ளது எனக் கூறியுள்ளார்.
அதே சமயம், சின்ன பையன் அவனது அப்பா போலவே இருக்கிறான். அதனால் சின்ன பையனைத் தனக்குப் பிடிக்கவில்லை எனக் கூறியுள்ளான். எனவே அவனை அடித்து தனக்கு வீடியோ எடுத்து அனுப்பச் சொல்லி கேட்டுள்ளார். அப்போதுதான் ‘உன்னை திருமணம் செய்து கொள்வேன்’ என கூறியுள்ளார். அதனால், இந்தப் பெண்ணும் அந்தக் குழந்தையை அடித்து அதை வீடியோ எடுத்து அனுப்பியுள்ளார். 40 நாட்களுக்கு முன்பாக, கணவன், மனைவிக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் வடிவழகனே அந்தப் பெண்ணை அழைத்துச் சென்று ஆந்திர மாநிலம், ராம்பள்ளியில் உள்ள தனது மாமியார் வீட்டில் விட்டுவிட்டு வந்துள்ளார். இருவரும் விவாகரத்து பெறும் நிலைக்குச் சென்றுள்ளனர்.
அதனால் 3 தினங்களுக்கு முன்பு அந்தப் பெண்ணிடம் விவாகரத்து பத்திரத்தில் கையெழுத்து வாங்கச் சென்றுள்ளார் வடிவழகன். அப்போது இவருடைய பொருட்களைக் கேட்டு வாங்கி வரும்போது, அந்த பெண் வைத்திருந்த போனையும் வாங்கி வந்துள்ளார். அப்போதுதான் இந்த வீடியோ பற்றி தெரிந்து காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த தகவல்கள் அனைத்தும், அந்தப் பெண்ணை விசாரித்தபோது தெரியவந்தது. அந்த பெண் மனதளவில் பாதிக்கப்பட்டுள்ளாரா..? என உறுதி செய்வதற்கு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று, மருத்துவர் மூலம் சோதித்த போது ‘அவர் நலமாக உள்ளார்’ என மருத்துவர் உறுதிசெய்தார். அதைத்தொடர்ந்து, நீதிபதி முன்னிலையில் அப்பெண்ணை ஆஜர்படுத்தி கடலூர் மத்திய சிறையில் 15 நாள்கள் காவலில் வைத்துள்ளோம்.
அந்தப் பெண் கூறிய தகவலின்படி, பிரேம்குமாரை பிடிப்பதற்கு ஒரு காவல் குழு சென்னை விரைந்துள்ளது. அவனது இரு போன் நம்பர்களிலும் முயற்சி செய்தபோது ‘ஸ்விட்ச் ஆஃப்’ என வருகிறது. அந்த நபரை பிடித்து விசாரிக்கும்போதுது மேலும் தகவல்கள் தெரியவரும்” என்றார்.