
டெல்லியில் இன்று அதிகாலை முதல் பரவலாக (Heavy rain in Delhi) மழை பெய்து வருகிறது. இதனால், சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. டெல்லி இந்திராகாந்தி சர்வதேச விமான நிலையம் பகுதியில் கனமழை பெய்தது. இதனால், விமான நிலையத்தின் 3வது டெர்மினலில் மழை நீர் தேங்கியது.
டெல்லி விமான நிலையம்
இதனால் விமானங்களை இயக்க முடியாத சூழ்நிலை உருவானதால், மழை நீரை அகற்றும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டனர். இது தொடர்பாக விமான நிலையம் சார்பில் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது: சிரமத்திற்கு வருந்துகிறோம். கனமழை காரணமாக, சிறிது நேரத்திற்கு விமான நிலையத்தில் மழை நீர் தேங்கியது. ஊழியர்கள் உடனடியாக கவனித்து, பிரச்னையை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

இதனிடையே, இந்திய வானிலை மையம் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: டெல்லி, என்சிஆர், பகதுர்கார்க், குருகிராம், லோனி தேகாட், ஹிண்டன் விமான படை தளம், காசியாபாத், இந்திராபுரம், ரோதக், சர்கி தாத்ரி, மடன்ஹலி, ஜஜார், சோனிபட் பகுதிகளில் அடுத்த 2 மணி நேரத்திற்கு கன முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தெரிவித்து உள்ளது.