ஆஸ்கார் விருது போட்டிக்கு தமிழ் படமான கூழாங்கல் (Koolangal) இந்திய சார்பில் அதிகாரப்பூர்வ தேர்வு. இந்திய திரைப்பட கூட்டமைப்பில் இருந்து மொத்தம் 15 நடுவர்கள், மலையாள படத் தயாரிப்பாளர் சாஜி என்.கருண் தலைமையில் மேற்கண்ட 14 திரைப்படங்களையும் பார்வையிட்டனர்.
94-வது அகாடெமி விருதுகள் (ஆஸ்கார்) அடுத்த ஆண்டு மார்ச் 27ம் தேதி நடைபெற உள்ளது. ஆஸ்கார் விருது பட்டியலில் “சிறந்த வெளிநாட்டு திரைப்படத்துக்கான” பிரிவில் இந்திய திரைப்படம் ஒன்றை தேர்வு செய்யும் பணி கொல்கத்தாவில் நடைபெற்றது. இதில் “சர்தார் உத்தாம்”, “ஷேர்னி”, “செல்லோ ஷோ”, “நாயாட்டு” மற்றும் தமிழ் படங்களான “கூழாங்கல்” “மண்டேலா” உள்ளிட்ட 14 திரைப்படங்கள் ஆஸ்கார் விருதுக்கான பரிந்துரை பட்டியலில் இடம்பெற்றன.
இந்திய திரைப்பட கூட்டமைப்பில் இருந்து மொத்தம் 15 நடுவர்கள், மலையாள படத் தயாரிப்பாளர் சாஜி என்.கருண் தலைமையில் மேற்கண்ட 14 திரைப்படங்களையும் பார்வையிட்டனர் மண்டேலா படத்தை அறிமுக இயக்குநர் மடோன் அஷ்வின் இயக்கியிருந்தார்.சாதி அரசியல் ஆதிக்கம் செலுத்தும் ஒரு கிராமத்தில் நடைபெறும் உள்ளாட்சித் தேர்தலில், ஒரு தாழ்த்தப்பட்ட சிகையலங்கார நிபுணர் கேம் சேஞ்சராகிறார். அவரால் அந்த கிராம மக்களின் வாழ்க்கையில் சில மாற்றங்களைக் கொண்டு வர முடிந்ததா? என்னும் கதையமைப்பில் மண்டேலா திரைப்படம் உருவாக்கப்பட்டிருந்தது.
விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாராவின் தயாரிப்பு நிறுவனம் ரவுடி பிக்சர்ஸ் சார்பில் கூழாங்கல் தயாரிக்கப்பட்டது. 2022ம் ஆண்டின் ஆஸ்கார் விருதுக்கான இந்தியாவின் அதிகாரப்பூர்வ தேர்வாக கூழாங்கல் அமைந்து உள்ளது. இப்படத்தை பிஎஸ் வினோத்ராஜ் இயக்கியுள்ளார். தயாரிப்பாளர் விக்னேஷ் சிவன் சமூக வலைத்தளங்களில் இந்த செய்தியை அனைவருடனும் பகிர்ந்து கொண்டார்.இந்த ஆண்டு ரோட்டர்டாமில் நடந்த சர்வதேச திரைப்பட விழாவில் கூழாங்கல் திரைப்படத்துக்கு “டைகர் விருது” பெற்றது.
யதார்த்தமான கதையம்சம் கொண்ட இந்த படத்தில் செல்லப்பாண்டி மற்றும் கருத்தடையான் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.டைகர் விருதை வென்ற முதல் தமிழ் படம் கூழாங்கல். இந்த படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த வருடம் இந்தியா சார்பில் ஆஸ்கார் போட்டிக்கு மலையாள திரைப்படமான ஜல்லிக்கட்டு தேர்வானது. ஆனால், ஆஸ்கார் விருதுக்கான தேர்வுக் குழுவால் அந்த திரைப்படம் இறுதி பட்டியலுக்கு ஏற்றுக்கொள்ளப் படவில்லை. இதுவரை “மதர் இந்தியா, சலாம் பம்பாய் மற்றும் லகான்” ஆகிய மூன்று திரைப்படங்கள் மட்டுமே ஆஸ்கார் விருதுக்கான இறுதிப் பட்டியலுக்கு இந்திய திரைப்படங்களாக தேர்வு செய்யப்பட்டிருந்தன. ஆனால், துரதிர்ஷ்டவசமாக இதுவரை எந்த ஒரு இந்திய திரைப்படமும் சிறந்த வெளிநாட்டு திரைப்படத்துக்கான ஆஸ்கார் விருதை பெறவில்லை.