![Kiruba Store - Online Shopping Store in India](https://www.ariviyalpuram.com/wp-content/uploads/2021/02/kirubastore-1280x250-2.jpg)
பிரபல கன்னட நடிகர் புனித் ராஜ்குமார் (Puneeth Rajkumar) மாரடைப்பால் மரணம். கன்னடப் படவுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரும் பவர் ஸ்டார் என்று ரசிகர்களால் கொண்டாடப்பட்டவருமான புனித் ராஜ்குமார் மாரடைப்பால் பெங்களூருவில் காலமானார். அவருக்கு வயது 46.
![Kannada actor Puneeth Rajkumar has died of a heart attack!!! Kannada actor Puneeth Rajkumar has died of a heart attack!!!](https://ariviyalnews.com/wp-content/uploads/2021/10/Kannada-actor-Puneeth-Rajkumar-has-died-of-a-heart-attack-1024x576.jpg)
ராஜ்குமார் இன்று காலையில் உடற்பயிற்சி செய்துகொண்டிருந்தபோது திடீரென அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டு மயங்கிவிழுந்தார். உடனடியாக பெங்களூருவில் உள்ள விக்ரம் மருத்துவனைக்குக் கொண்டுசெல்லப்பட்டார். கொண்டுசெல்லும் வழியிலும் அவருக்கு மீண்டும் மாரடைப்பு ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது. விக்ரம் மருத்துவமனையில் அவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டார். ஆனால், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.
கன்னடத் திரையுலகில் சூப்பர் ஸ்டாராக விளங்கிய ராஜ்குமார் – பர்வதம்மா தம்பதியின் ஐந்தாவது மற்றும் இளைய மகனான புனித் ராஜ்குமார் 1975 மார்ச் 17ஆம் தேதி சென்னையில் பிறந்தார். ஆறு மாதக் குழந்தையாக இருக்கும்போதே பிரேமதா கனிகே படத்தில் புனித் தோன்றியிருக்கிறார்.
![Kannada actor Puneeth Rajkumar has died of a heart attack!!! Kannada actor Puneeth Rajkumar has died of a heart attack!!!](https://ariviyalnews.com/wp-content/uploads/2021/10/Kannada-actor-Puneeth-Rajkumar-has-died-of-a-heart-attack-2-1024x576.jpg)
2002ஆம் ஆண்டிலிருந்து கதாநாயகனாக நடித்துவரும் புனித்தின் முதல் படமான அப்பு அவருக்கு பெரும் பெயரை பெற்றுத் தந்தது.தனது உடற்பயிற்சி செய்யும் வீடியோக்களுக்காக சமூக வலைதளங்களில் பெரிதும் அறியப்பட்டவர் புனித். ஆனால், உடற்பயிற்சி செய்துகொண்டிருக்கும்போதே அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது அவரது ரசிகர்களைப் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியிருக்கிறது.
அவர் சேர்க்கப்பட்டிருந்த விக்ரம் மருத்துவமனைக்கு முன்பாக பெரும் எண்ணிக்கையில் ரசிகர்கள் குவிந்துள்ளனர். புனித் ராஜ்குமாரின் மரணம் குறித்து கேள்வியுற்று தான் அதிர்ச்சி அடைந்ததாக தமிழக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.