பொறியியல் படிப்புகளுக்கான தரவரிசை பட்டியல் (Engineering Rank List) வெளியிடப்பட்டது. tneaonline.org என்ற முகவரியில், மாணவர்கள் பட்டியலை தெரிந்து கொள்ளலாம். பொறியியல் மாணவர் சேர்க்கைக்கு, இந்த ஆண்டு 440 கல்லுாரிகள் மட்டுமே முன் வந்துள்ளன.
ஆனால், முந்தைய ஆண்டை விட, அதிக மாணவர்கள் விண்ணப்பித்துள்ளதால் ஒதுக்கீடு பெற கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில், அண்ணா பல்கலையின் இணைப்பு அந்தஸ்து பெற்ற பொறியியல் கல்லுாரிகளில், மாணவர் சேர்க்கைக்கான ஆன்லைன் வாயிலான கவுன்சிலிங் வரும், 17ம் தேதி துவங்க உள்ளது. இதற்கான தரவரிசை பட்டியல் இன்று வெளியிடப்பட்டது. tneaonline.org என்ற முகவரியில், மாணவர்கள் பட்டியலை தெரிந்து கொள்ளலாம். இந்த ஆண்டு மாணவர் சேர்க்கைக்கு அனுமதிக்கப்பட்ட கல்லுாரிகளை, அண்ணா பல்கலை இறுதி செய்து, தொழில்நுட்ப கல்வி இயக்குனரகத்திடம் வழங்கியுள்ளது.
அதன்படி, 440 கல்லுாரிகள் மட்டுமே, மாணவர் சேர்க்கையை நடத்த முன்வந்துள்ளன. முந்தைய ஆண்டை விட, கல்லுாரிகளின் எண்ணிக்கை பெருமளவு குறைந்துள்ளது. அதேபோல, மொத்தம் ஒரு லட்சத்து 51 ஆயிரத்து 870 இடங்களுக்கு மட்டுமே மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது. இது முந்தைய ஆண்டுகளை விட குறைவு. ஆனால், கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 15 ஆயிரம் மாணவர்கள் வரை அதிகமாக, 1.45 லட்சம் பேர் வரை கவுன்சிலிங்கில் பங்கேற்க கட்டணம் செலுத்தி விண்ணப்பித்துள்ளனர். இதன் காரணமாக, முக்கிய கல்லுாரிகள் மற்றும் முக்கிய பாட பிரிவுகளுக்கு கவுன்சிலிங் வழியே, அரசு ஒதுக்கீட்டு இடங்களை பெறுவதில், மாணவர்களிடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது.