இந்தியாவில் கொரோனா பரவல் (Corona Infection) தொடங்கியதில் இருந்து தற்போது வரை 4.45 லட்சத்துக்கும் மேற்பட்டோர் மரணம் அடைந்துள்ளனர். கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு தொகை வழங்குவது எவ்வளவு என்பது குறித்து மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளது.
அதன்படி, கொரோனாவினால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 50,000 ரூபாய் வழங்கலாம் என மத்திய அரசு பரிந்துரைத்துள்ளது. இதுமட்டுல்லாமல், கொரோனா பேரிடரை கையாளும் பணியின் போதும், நிவாரண பணிகளின் போதும் இறந்தவர்களின் குடும்பங்களுக்கும் இந்த இழப்பீடு தொகையை அளிக்கலாம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கான இழப்பீட்டு தொகை மாநிலங்கள் சார்பில், மாநில பேரிடர் மேலாண்மை நிறுவனத்தால் வழங்கப்பட வேண்டும் என மத்திய அரசு தனது பிரமாணப் பத்திரத்தில் கூறியுள்ளது.
இந்தியாவில் கொரோனா பரவல் தொடங்கியதில் இருந்து தற்போது வரை 4.45 லட்சத்துக்கும் மேற்பட்டோர் மரணம் அடைந்துள்ளனர். தற்போது மத்திய அரசு முன் மொழிந்துள்ள இந்த இழப்பீடு தொகை ஏற்கனவே மரணமடைந்தவர்கள் மட்டுமின்றி இனி வரும் காலங்களில் கொரோனாவால் இறப்பவர்களுக்கும் பொருந்தும். கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு மத்திய, மாநில அரசுகள் 4 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என உத்தரவிடக் கோரி, வழக்கறிஞர்கள் ரீபக் கன்சல் மற்றும் கவுரவ் குமார் பன்சால் என இருவர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளனர்.
இந்த வழக்கினை விசாரித்த உச்சநீதிமன்றம் கடந்த ஜூன் 30ம் தேதி உத்தரவு ஒன்றை பிறப்பித்திருந்தது, அதன்படி, கொரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு இழப்பீடு வழங்குவதற்கான வழிகாட்டுதல்களை 6 வாரங்களுக்குள் தேசிய பேரிடர் மேலாண்மை நிறுவனம் வகுக்க வேண்டும் மற்றும் அதனை உச்சநீதிமன்றத்தில் சமர்பிக்க வேண்டும் என கூறியது. மேலும் தேசிய பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின்படி பேரிடரில் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு இழப்பீடு வழங்குவது உட்பட பாதிக்கப்பட்டவர்களுக்கு குறைந்தபட்ச நிவாரணம் வழங்குவது கட்டாயம் என மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் சுட்டிக்காட்டியது குறிப்பிடத்தக்கது.
அதனைப் போல, கொரோனா சார்ந்த மரணங்களுக்கு அளிக்கப்படும் சான்றிதழ்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிடுவதில் மத்திய அரசு தாமதப்படுத்திவருகிறது, மத்திய அரசு இந்த நெறிமுறைகளை வெளியிடுவதற்குள் கொரோனாவின் மூன்றாம் அலையே முடிந்துவிடும் என கடந்த செப்டம்பர் 3ம் தேதி உச்சநீதிமன்ற அமர்வு அதிருப்தி தெரிவித்திருந்தது.