திருச்சி கொட்டப்பட்டு இலங்கை அகதிகள்(refugees) முகாமில் உள்ளவர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்கும் விவகாரத்தில், “இலங்கை அகதிகள் சட்டவிரோதமாக குடியேறியவர்கள். எனவே அவர்களுக்கு குடியுரிமை வழங்கும் விஷயத்தில் உணர்ச்சிபூர்வமாக முடிவெடுக்க முடியாது சட்டத்திற்குட்பட்டே முடிவெடுக்க முடியும்” என மத்திய அரசு மதுரைக் கிளையில் வாதம் செய்துள்ளது.
திருச்சி கொட்டப்பட்டு இலங்கை அகதிகள் முகாமில் உள்ளவர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்குவது குறித்து முடிவெடுக்குமாறு தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை எதிர்த்து மத்திய அரசு சார்பில் மேல்முறையீட்டு வழக்கு பதிவுயப்பட்டு, வாதம் செய்யப்பட்டுள்ளது. திருச்சி கொட்டப்பட்டு இலங்கை அகதிகள் முகாமை சேர்ந்த பலர், தங்களுக்கு இந்திய குடியுரிமை வழங்க உத்தரவிட வேண்டும் என கடந்த 2009-ம் ஆண்டு உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த தனிநீதிபதி, கடந்த 2019-ம் ஆண்டு மனுதாரர்கள் அனைவரும் குடியுரிமை கோரி, திருச்சி மாவட்ட ஆட்சியரிடம் புதிதாக விண்ணப்பிக்கவும், அந்த விண்ணப்பங்களை திருச்சி மாவட்ட ஆட்சியர் மத்திய அரசுக்கு தாமதம் இன்றி அனுப்பி, உரிய நடவடிக்கை எடுக்கவும் வேண்டும் என உத்தரவிட்டார்.
உத்தரவை முறையாக நிறைவேற்றாத அதிகாரிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை கோரி நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்யப்பட்டு அது நிலுவையில் உள்ளது. இந்த வழக்கு ஏற்கனவே விசாரணைக்கு வந்த பொழுது தமிழக அரசு மற்றும் எதிர் மனுதாரராக இருக்கும் இலங்கை அகதிகளுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிடப்பட்டிருந்தது. இந்த வழக்கு இன்று தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி மற்றும் நீதிபதி துரைச்சாமி அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது மத்திய அரசுத்தரப்பில், “இலங்கை அகதிகள் சட்டவிரோதமாக குடியேறியவர்கள், எனவே அவர்களுக்கு குடியுரிமை வழங்கும் விஷயத்தில் உணர்ச்சிபூர்வமாக முடிவெடுக்க முடியாது. சட்டத்திற்குட்பட்டே முடிவெடுக்க முடியும்” என தெரிவிக்கப்பட்டது. அப்போது நீதிபதிகள், “தமிழக அரசு மற்றும் எதிர் மனுதாரராக இருக்கும் இலங்கை அகதிகளுக்கு அனுப்பிய நோட்டீஸ் சரியாக சென்று சேரவில்லை. எனவே, தமிழக அரசு மற்றும் எதிர் மனுதாரராக இருக்கும் இலங்கை அகதிகளுக்கு புதிதாக நோட்டீஸ் அனுப்பி பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிடுகிறோம்” எனக்கூறி, வழக்கை 3 வாரத்திற்கு ஒத்திவைத்தனர்.