வருவாய் குறைந்ததால் பொருளாதார இழப்பை சந்தித்துள்ள இலங்கையில் , உணவுப்பொருட்களின் பதுக்கலை தடுக்கவும், அத்தியாவசிப் பொருட்களின் விலையை கட்டுக்குள் வைக்கவும் பொருளாதார அவசர நிலையை அந்த நாட்டு (President Gotabhaya) ஜனாதிபதி கோத்தபய ராஜபக்சே பிறப்பித்துள்ளார்.
கொரோனா சூழல், முக்கிய வருவாய் ஆதாரமான சுற்றுலாத் துறையின் முடக்கம் போன்றவற்றால் இலங்கையின் அன்னியச் செலாவணி இருப்பு குறைந்து, இலங்கையின் ரூபாய் மதிப்பு வெகுவாக சரிந்துள்ளது. இதனால் , உணவுப்பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்வதில் பிரச்சனை ஏற்பட்டுள்ளது.
இருப்பு குறைவாலும், பதுக்கல் அதிகரிப்பாலும் உணவுப்பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டு, அவற்றின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. இதனிடையே அரிசி, சர்க்கரை, பால் பவுடர், வெங்காயம், உருளைக்கிழங்கு போன்றவற்றுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால் கடைகளில் நீண்டவரிசை காணப்படுவதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.